வாகன இறக்குமதி செலவு தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்!
2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் வாகன இறக்குமதிக்காக இலங்கை சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடர்ந்தால், ஆண்டு இறுதிக்குள் வாகன இறக்குமதி செலவு 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், கடந்த ஆண்டில் பதிவான 2 பில்லியன் அமெரிக்க டொலர் செலவினத்தையும் இந்த ஆண்டு மீறக்கூடும் என குறிப்பிட்டார். அதேவேளை, இறக்குமதி செலவுகள் உயர்ந்தாலும் அரசின் வரி வருவாய் இலக்குகள் தற்போது பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதற்றம் மற்றும் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்திருப்பது இலங்கை ரூபாவின் பெறுமதியில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் விளக்கினார். எரிபொருள் இறக்குமதிக்கான வெளிநாட்டு நாணய தேவை அதிகரித்துள்ளதால் ரூபா தற்காலிகமாக பலவீனமடைந்துள்ளதாகவும் கூறினார்.
2026 ஆம் ஆண்டில் இலங்கை ரூபா சுமார் 4.8 சதவீதம் மட்டுமே வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இந்தியா, நேபாளம் மற்றும் இந்தோனேசியா போன்ற எண்ணெய் இறக்குமதியை சார்ந்த நாடுகளின் நாணயங்கள் இதைவிட அதிக வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2022 ஆம் ஆண்டில் உள்நாட்டு பொருளாதார நெருக்கடியால் ரூபா கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலைமை உலகளாவிய பொருளாதார மாற்றங்களின் தாக்கமாகும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதற்கிடையில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டொலரின் விலை உயர்வு காரணமாக நாட்டின் இறக்குமதி செலவுகள் மேலும் அதிகரிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
