கைது செய்ய முயன்றபோது தப்பியோட முயன்ற சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு!
அம்பாறை பகுதியில் சட்டவிரோத மதுபான வர்த்தகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்ய முயன்றபோது பரபரப்பான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று (17) இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, குறித்த நபர் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தப்பிச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பெற்று கொண்டிருந்த நிலையிலேயே அவர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, வீதி பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சந்தேகநபரை மீண்டும் கைது செய்ய முயன்றபோது, அதிகாரியின் ஆயுதத்தைப் பறிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட பதற்றநிலையைக் கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் மீண்டும் காயமடைந்துள்ளார். அவர் தொடர்ந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்ததாக அம்பாறை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
