சுரக்சா காப்புறுதித் திட்டம் - பாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!
பாடசாலை மாணவர்களுக்கான “சுரக்சா” காப்புறுதித் திட்டம் 2027ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்த காப்புறுதித் திட்டம் 2027ஆம் ஆண்டுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது தொடர்ச்சியாக நீட்டிக்கப்படவுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் 1 முதல் 13ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் 5 முதல் 21 வயதுக்குட்பட்ட மாணவர்களும், உதவி பெறும் விசேட பாடசாலைகளில் 4 முதல் 21 வயதுக்குட்பட்ட மாணவர்களும் இதில் அடங்குகின்றனர்.
கல்வி அமைச்சு மற்றும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் இணைந்து செயற்படுத்தும் இந்தத் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு சுகாதார காப்பீடு, விபத்துக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
