உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து உயர்வு : முட்டை விலை தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை
உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், முட்டை உற்பத்தித் துறையை நிலைநிறுத்துவது கடினமாகியுள்ளது என அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத் தலைவர் அஜித் குணசேகர, தற்போது ஒரு முட்டையை உற்பத்தி செய்யும் செலவு ரூ. 32 வரை அதிகரித்துள்ளதாக கூறினார்.
ஆனால், பண்ணைகளிலிருந்து முட்டைகள் ரூ. 27 முதல் 28 வரையிலான மொத்த விலைக்கே விற்பனை செய்யப்படுவதால், உற்பத்தியாளர்கள் கடுமையான நட்டத்தை எதிர்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான பண்ணை உரிமையாளர்கள் தங்களது தொழிலை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஒரு முட்டைக்கு ரூ. 6 மதிப்புக்கூட்டு வரி (VAT) விதிக்கப்பட்டுள்ளமை உற்பத்திச் செலவை மேலும் அதிகரித்துள்ளதாகவும், தற்போதைய சூழலில் உற்பத்தியை தொடர்வது மிகவும் சிரமமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனால், முட்டை உற்பத்தியாளர்களை பாதுகாக்க அரசு ஒரு முட்டைக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும் என சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல், சதொச நிறுவனம் மூலம் உபரி முட்டை உற்பத்தியை கொள்முதல் செய்து உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் இந்தத் துறையிலிருந்து விலகத் தொடங்கினால், எதிர்காலத்தில் நாட்டில் முட்டைத் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் இருப்பதாகவும், அந்நிலையிலே முட்டைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும் என்றும் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போது சந்தையில் ஒரு முட்டை ரூ. 30 முதல் 35 வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
