தோல்வியை தழுவினார் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல் 23) ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டு வருகின்றன.
இன்று மாலை 4 மணி நிலவரப்படி, மொத்தம் 234 தொகுதிகளில் 111 இடங்களில் விஜய் தலைமையிலான தவெக முன்னிலையில் உள்ளது. அதேவேளை, திமுக 66 இடங்களிலும், அதிமுக 57 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
இந்த நிலையில், தற்போதைய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் 4,718 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். அவர் இந்தத் தொகுதியில் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பத்திலிருந்தே முன்னிலை பெற முடியாமல் பின்னடைவை சந்தித்தார்.
இறுதியில், மு.க. ஸ்டாலின் 67,530 வாக்குகள் பெற்ற நிலையில், தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு அவரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் தோல்வியை சந்தித்துள்ளார். மு.கருணாநிதி மறைவிற்குப் பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்ற அவர், இதற்கு முன் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்தார்.
இந்நிலையில், 2026 சட்டசபைத் தேர்தல் திமுகக்கு முதல் பெரிய தோல்வியாக அமைந்துள்ளது. இதற்கு முன், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 1996 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று தற்போது முதலமைச்சராக இருந்தபடியே மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார்.
மேலும், அதிமுக கூட்டணியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அவர் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
