வெளிவிவகார அமைச்சின் சான்றிதழ் வழங்கும் பணிகள் இடைநிறுத்தம்!
வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமை (e-DAS) திடீர் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானதால், அனைத்து ஆவணச் சான்றளிப்பு சேவைகளும் மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்தரமுல்லையில் அமைந்துள்ள தூதரக விவகாரப் பிரிவின் தலைமையகம் உள்ளிட்ட யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் பிராந்திய அலுவலகங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர்புடைய தொழில்நுட்ப சேவை வழங்குநர்களுடன் இணைந்து e-DAS முறைமையை விரைவில் வழமைநிலைக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே இணையவழி நேரஒதுக்கீடு (Online Appointment) பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் புதுப்பிப்புகளை e-Channeling முறைமையின் மூலம் கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முறைமை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தவுடன் அதுகுறித்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
