சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து அரச அதிகாரிகளுக்கும் வெளியான விசேட அறிவித்தல்!
கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து அரச அதிகாரிகளுக்கும் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான சொத்து விபரங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி ஜூன் 30ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் செயற்பாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில், இம்முறை அனைத்து பிரகடனங்களும் டிஜிட்டல் முறைமையின் ஊடாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், கையால் பூர்த்தி செய்யப்பட்ட பிரகடனங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகள் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக தமது மின்னணு பிரகடனங்களைச் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜூன் மாத இறுதியில் அதிகளவிலான பயனர்கள் ஒரே நேரத்தில் இணையத்தளத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதால் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, இறுதி நேரம் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே பதிவு செய்து பிரகடனங்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறுவது பாரிய குற்றமாகக் கருதப்படும் என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் விதிகளின்படி, ஜூன் 30ஆம் திகதிக்குப் பின்னர் பிரகடனங்களைச் சமர்ப்பிப்போர் மேலதிக கட்டணத்திற்கு உட்படுத்தப்படுவதுடன், தேவையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொறுப்புள்ள அதிகாரிகளாக தங்களது மின்னணு சொத்து பிரகடனங்களை உரிய காலத்திற்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
