நாட்டின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
களு கங்கை வடிநிலப்பகுதியில் அமைந்துள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட அளவீடுகளின்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட குடா கங்கை மற்றும் மகுர கங்கை ஆகியவற்றின் வான்பரப்புகளை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை உருவாகக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
களு கங்கையின் குடா கங்கை உபவடிநிலத்தின் மேல்பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குடா கங்கை மற்றும் மகுர கங்கை சுற்றுவட்டார தாழ்நிலப் பகுதிகளில் உள்ள சில வீதிகள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அப்பாதைகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனர்த்த மேலாண்மை பிரிவுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
