நிலைதடுமாறி விழுந்த தந்தையின் உடலில் நசுங்கி 3 வயது சிறுவன் பலி!


கம்பளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில், தந்தையின் உடலின் கீழ் சிக்கிய 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அனர்த்தம் நாரன்விட்ட – ஆடியா கடவத, பிஹில்லதெனிய பகுதியில் உள்ள வீட்டொன்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டின் உள்ளகப் பரணில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாயை எடுக்க தந்தை மேலே ஏறியிருந்த நிலையில், அவரின் பின்னால் வந்த சிறுவன் பரணின் கீழ்பகுதியில் நின்றிருந்ததாக கூறப்படுகிறது.

அந்தச் சமயத்தில் தந்தை தவறி கீழே விழுந்ததில், அவர் நேரடியாக குழந்தையின் மீது விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளானதுடன், உடனடியாக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும், வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே 3 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த தந்தை தற்போது கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.