நாட்டில் டெங்கு பரவல் தீவிரம் - 15 மரணங்கள் பதிவு!


இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரை நாடு முழுவதும் 29,589 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

2026 மே 18 ஆம் திகதி வரையான தகவல்களின் அடிப்படையில், 15 டெங்கு மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், டெங்கு பரவல் அதிக ஆபத்து நிலவுகின்ற 39 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண ரீதியாகப் பார்க்கும்போது, மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் இடம்பெறுகின்றன.

அதேவேளை, நாட்டின் அனைத்து 25 மாவட்டங்களிலிருந்தும் டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தறை, காலி, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் அதிகமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், பாடசாலைகள், அரச அலுவலகங்கள், பணியிடங்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்களில் டெங்கு பரவல் வேகம் அதிகரித்துள்ளதாக பூச்சியியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.