அதிபர் சேவை சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு: வெளியான புதிய சுற்றறிக்கை!


இலங்கை அதிபர் சேவையின் அதிகாரிகள் பல வருடங்களாக எதிர்நோக்கி வந்த சம்பள முரண்பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

03/2014 (I) என்ற இந்த புதிய சுற்றறிக்கை, 2026 மே 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைவாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சம்பளக் கணிப்பீட்டில் முக்கிய மாற்றம்

இதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த 03/2014 சுற்றறிக்கையின் 01ஆம் பிரிவும் அதன் உப பிரிவுகளும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அதற்குப் பதிலாக, நிறுவனக் கோவையின் முதலாம் தொகுதியின் VIIஆம் அத்தியாயத்தின் 05ஆம் பிரிவின்படி புதிய ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த திருத்தத்தின்படி, அதிபர் சேவை அதிகாரிகளின் சம்பளக் கணிப்பீடு இனிமேல் “ஒரு பதவியுயர்வாகக் கருதி” மேற்கொள்ளப்படும். இதன் மூலம் நீண்டகாலமாக நிலவிய சம்பள முரண்பாடுகள் மற்றும் அநீதிகளைத் தவிர்க்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பதவியுயர்வுத் தகைமைகளுக்கான விசேட சலுகைக் காலம்

சம்பளத் திருத்தங்களுடன் இணைந்து, அதிபர் சேவையின் பதவியுயர்வுச் செயல்முறையில் ஏற்பட்டிருந்த நடைமுறைச் சிக்கல்களுக்கும் தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2009 நவம்பர் 13ஆம் திகதி இலங்கை அதிபர் சேவையின் IIIஆம் தரத்திற்கு இணைத்துக்கொள்ளப்பட்ட அதிகாரிகளின் Grade I வரையிலான பதவியுயர்வு செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்காக அரசாங்க சேவை ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடன் விசேட சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பந்தப்பட்ட அதிபர்கள் தங்களது பதவியுயர்வுகளுக்குத் தேவையான தகைமைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் 2027 டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்ட சலுகைக் காலம் வழங்கப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை, அதிபர் சேவை அதிகாரிகள் நீண்டகாலமாக முன்வைத்து வந்த சம்பள மற்றும் பதவியுயர்வு தொடர்பான பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.