உர மானியம் 5000 ரூபாவால் அதிகரிப்பு : விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
அரசாங்கத்தினால் ஒரு ஹெக்டேயர் நெற்செய்கைக்காக வழங்கப்படும் உர மானியத் தொகை 5,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை அறிவித்தார்.
இதன்படி, ஒரு ஹெக்டேயருக்கான உர மானியம் 25,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மானியத்தின் மூலம் 502,836 விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசாங்கம் மொத்தமாக 10,947 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதுடன், அந்தத் தொகை ஒரே தடவையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படவுள்ளது.
மேலும், சந்தை விலை உயர்ந்தாலும் முழு யால பருவத்திலும் நெல் விவசாயத்திற்குத் தேவையான ஒரு மூட்டை யூரியா உரம் 10,200 ரூபாய்க்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான உர விநியோகம் விவசாய சேவை நிலையங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது யால பருவ நெற்செய்கை 409,670 ஹெக்டேயர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 40,822 ஹெக்டேயர் நிலப்பரப்பு பயிரிடத் தயார்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 364,900 ஹெக்டேயர் நிலப்பரப்புக்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளதுடன், 502,836 பயனாளிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.
மானியத் தொகை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, இந்த யால பருவத்தில் மட்டும் சுமார் 2,500 மில்லியன் ரூபாய் கூடுதலாக அரசாங்கம் செலவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
