மீண்டும் அதிகரிக்கும் மின் கட்டணம்! - வெளியான தகவல்
நெஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர் நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட செலவுக் கணக்கீட்டின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கு சுமார் 18 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முன்மொழிவுக்கு தொடர்பான இறுதி தீர்மானம், பொதுமக்களின் கருத்துகளைப் பெற்ற பின்னர் மே 09 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 4.3 சதவீதத்திலிருந்து 25.3 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், அடுத்த கட்ட செலவுக் கணக்கீடு கடந்த 27 ஆம் திகதி ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்திருப்பதும், அதனால் ஏற்பட்ட செலவின உயர்வும் முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் சுமார் 38 பில்லியன் ரூபாய் நட்டத்தை சந்தித்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மின் கட்டணத்தை 18.11 சதவீதம் அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் மானியம் வழங்க வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், சமய வழிபாட்டிடங்கள், 180 அலகிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் சுற்றுலா விடுதிகள், சிறிய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வீட்டு பயனாளர்கள் ஆகியோருக்கு அதிகப்படியான சுமை ஏற்படாமல் பாதுகாக்க நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
நிலக்கரியின் தரம் குறைவால் ஏற்படும் கூடுதல் செலவை மின் கட்டணத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்றும் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த விசேட மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகள் பெறும் செயல்முறை ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளை எழுத்து மூலமாக மே 06 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.
பெறப்படும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிவிப்பு மே 09 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது.
