ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!


யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையானதாக கூறப்படும் 19 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெல்லிப்பழை வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், கொக்குவில் பகுதியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் கணிதப் பிரிவில் உயர்தரம் கற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று அதிகாலை அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மாணவர் மீட்கப்பட்ட போது அவர் வித்தியாசமான முறையில் ஆடை அணிந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அவர் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் ஆன்லைன் விளையாட்டின் சில சவால்கள் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் தோன்றும் சூழலில் உடனடியாக உதவி தேடுவது மிக அவசியம். அருகிலுள்ள சுகாதார நிலையங்கள் அல்லது உதவி இலக்கங்கள் மூலம் ஆலோசனைகளைப் பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.