தாக்குதலில் உயிரிழந்த தனியார் பல்கலை மாணவன் தொடர்பில் வெளியான புதிய தகவல்!


ஹோமாகம பகுதியில் அமைந்துள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய விருந்தின் போது ஏற்பட்ட மோதலில், 19 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹிரிப்பிட்டிய, நிக்கடலுபோத்த பகுதியைச் சேர்ந்த யசித் சத்துக்க என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மாணவர்கள் குழுவொன்று குறித்த விருந்தகத்தில் ஒன்றுகூடியிருந்தது. இதன்போது கழிவறைக்குச் சென்ற மாணவிகள் திரும்ப வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, மற்றொரு குழு அங்கு சென்ற போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த வாய்த்தர்க்கமே பின்னர் இரு குழுக்களுக்கிடையிலான மோதலாக மாறியுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டபோது, உயிரிழந்த மாணவன் நீச்சல் குளம் அருகில் திடீரென கீழே விழுவது பதிவாகியுள்ளது.

ஆரம்பத்தில் தாக்குதலே மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டிருந்தாலும், பிரேத பரிசோதனையில் உயிருக்கு ஆபத்தான வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மரணத்திற்கான துல்லியமான காரணத்தை கண்டறிய மேலதிக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு மாணவன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது திட்டமிட்ட தாக்குதலா அல்லது எதிர்பாராத சம்பவமா என்பது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது.