பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
நாட்டின் சில பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் குருணாகல் மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று (26) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய காலநிலையில் வெட்டவெளிகள் மற்றும் மரங்களின் கீழ் தங்குவதை தவிர்க்குமாறும், வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர் நிலைகளுக்கு அருகில் இருப்பதை தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மின்சார உபகரணங்களை மின் இணைப்பிலிருந்து துண்டித்து வைக்கவும், அவசியமற்ற போது வாகனப் பயணங்களை குறைத்துக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மின்னல் காரணமாக ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுக்கும் வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
