நாட்டில் வாகன இறக்குமதி செலவு அதிகரிப்பு!
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட 2025ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கையின் படி, நாட்டில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் உயர்வடைந்துள்ளது.
வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான செலவு வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச நிலையை எட்டியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக நீண்டகாலமாக அமலில் இருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, 2025 ஜனவரி மாதம் முதல் தனிப்பட்ட வாகனங்களுக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. இதன் பின்னணியில், தேக்கமடைந்திருந்த வாகன தேவையின் உயர்வு மற்றும் பொருளாதார நிலைமை சீராகுதல் ஆகியவை இறக்குமதி அதிகரிப்பிற்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில் தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகன இறக்குமதிக்காக 2.04 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் வரலாற்றில் பதிவான மூன்றாவது அதிகபட்ச வருடாந்த செலவாகும். இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டில் 2.12 பில்லியன் டொலரும், 2018ஆம் ஆண்டில் 2.09 பில்லியன் டொலரும் செலவிடப்பட்டிருந்தது.
மேலும், 2025 ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் வாகன இறக்குமதியில் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
