துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அர்ச்சுனா எம்.பி!


நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (25) யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த காணி உரிமை தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த நிலம் தமக்குச் சொந்தமானது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்து வருகிறார். அதேவேளை, மற்றொரு தரப்பும் அதில் தங்களுக்கு உரிமை உள்ளதாகக் கோரி வருகின்றது.

இந்நிலையில், நேற்று அந்த காணியை சுத்தம் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இரு பெண்கள், அந்த நிலத்தின் ஒரு பகுதி தமக்குச் சொந்தமானது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, பெண்கள் எவ்வித ஆயுதங்களும் இல்லாமல் இருந்தபோதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் திடீரென துப்பாக்கியை எடுத்துக் காட்டி அவர்களை மிரட்டியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கி குறித்து முன்னரே பல தரப்பினரும் பாதுகாப்பு அச்சங்களை முன்வைத்திருந்தனர். இருப்பினும், இதுவரை அந்த ஆயுதம் மீளப் பெறப்படவில்லை. இந்த நிலை தொடருமானால் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் என பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.