பெண்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் - அர்ச்சுனா எம்.பி கைது!


காணி தகராறு தொடர்பான சம்பவத்தில், பெண்களை துப்பாக்கியால் மிரட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பெரியவிலன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. நிலத் தகராறு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டில், குறித்த நிலம் தமக்குச் சொந்தமானது என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ள நிலையில், அதே நிலத்துக்கு மற்றொரு தரப்பினரும் உரிமை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் தேதி, குறித்த நிலத்தை சுத்தம் செய்ய அவர் சென்றிருந்த போது, அங்கு வந்த இரண்டு பெண்கள் அந்த நிலத்தின் ஒரு பகுதி தங்களுக்குச் சொந்தமானது என கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அவர் தமக்கிருந்த கைத்துப்பாக்கியால் அந்த பெண்களை மிரட்டியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.