தற்போதைய அமைச்சர்கள் மீதான சொத்து குற்றச்சாட்டுகள் – எதிர்க்கட்சிகளுக்கு சரத் பொன்சேகா பதிலடி!


தற்போதைய அமைச்சர்கள் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் சொத்து குற்றச்சாட்டுகள் “வேடிக்கையானவை” என முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
முன்னைய ஆட்சியாளர்கள் பில்லியன் கணக்கில் டொலர்களை மோசடி செய்துள்ளனர். அதனுடன் ஒப்பிடுகையில் தற்போதைய அமைச்சர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மிகச் சிறியவை.

ஒரு அமைச்சருக்கு சுமார் 40 மில்லியன் ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுவது பெரிய விடயமல்ல. 60 வயதுக்கு அருகிலுள்ள ஒருவர் தனது உழைப்பின் மூலம் இத்தகைய தொகையை சேமித்திருப்பது தற்போதைய பொருளாதார சூழலில் சாதாரணமாகக் கருதப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், 250 மில்லியன் டொலர் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அரசு உரிய முறையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த 15 ஆண்டுகளாக அரசியலில் இருந்தபோது, தற்போதைய முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒழுக்கமான அரசியல் கலாசாரம் காணப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால் தான் அந்த அணிகளில் இருந்து விலகியதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், ஊழலற்ற, நாட்டுப்பற்றுள்ள மற்றும் அறிவார்ந்த புதிய தலைமுறையை கொண்ட வலுவான மாற்று எதிர்க்கட்சியை உருவாக்குவதே தனது நோக்கம் என்றும் அவர் கூறினார்.

75 ஆண்டுகளாக நாட்டை சுரண்டி, சொத்துக்களை சேர்த்தவர்களை மீண்டும் நம்பினால் நாடு முன்னேறாது என அவர் எச்சரித்தார்.

இதேவேளை, எதிர்கால ஜனாதிபதி தேர்தலை நோக்கி செயற்படும் சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு மக்கள் தக்க பதிலை வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகள் அல்லது சலுகைகள் பெறும் எண்ணம் தமக்கில்லை என்றும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டார்.