விமான நிலையத்தில் 110 கோடி பெறுமதியான போதைப்பொருள்களுடன் 22 இளம் பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவம்: மகாநாயக்க தேரர்களின் கடும் கண்டனம்!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூபா 110 கோடி பெறுமதியான போதைப்பொருள்களுடன் 22 இளம் பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கையின் மகாநாயக்க தேரர்கள் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து கூட்டாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், துறவற ஆடையை அணிந்து கொண்டு சட்டவிரோதமான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது புத்த சாசனத்திற்கும் சட்டத்திற்கும் எதிரான கடுமையான குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புனிதமான காவி உடையை தவறாகப் பயன்படுத்தும் இவ்வாறான செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்திய மகாநாயக்க தேரர்கள், குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்கள் பௌத்த மத பீடங்களிலிருந்து நீக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இளம் பிக்குகளை சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தும் நபர்கள் மற்றும் இதற்குப் பின்னால் உள்ள சூத்திரதாரிகள் குறித்து பாதுகாப்பு தரப்பினர் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
