மக்களின் வரிப்பணத்தைப் பாதுகாக்க முடியாத அளவிற்கு தற்போதைய அரசு நிர்வாகத் திறமையற்றதாக உள்ளது - ஹர்ஷண எம்.பி. கடும் சாடல்!
திறைசேரியில் உள்ள மக்களின் வரிப்பணத்தைப் பாதுகாக்க முடியாத அளவிற்கு தற்போதைய அரசு நிர்வாகத் திறமையற்றதாக உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா குற்றம்சாட்டியுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்த அரசுக்கு நாட்டை வழிநடத்தும் போதிய அனுபவம் இல்லை என்பதை முன்னரே எச்சரித்திருந்தோம். இருப்பினும், வெறுப்புணர்வை தூண்டி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது மக்களின் வரிப்பணத்தை வீணடித்துள்ளனர்.
திறைசேரியில் உள்ள பணம் என்பது ஒரு அரசியல் கட்சியின் நிதி அல்ல; அது நாட்டின் மக்களின் கடின உழைப்பின் மூலம் பெறப்பட்ட வரிப்பணம் ஆகும். இந்த நிதி இழப்புக்கு யார் பொறுப்பேற்கின்றனர் என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.
நாடாளுமன்றம் என்பது நாட்டின் நிதி தொடர்பான முழுமையான பொறுப்பைக் கொண்ட நிறுவனம். இருப்பினும், பல மாதங்களாக இந்த நிதி மோசடி தொடர்பான தகவல் நாடாளுமன்றத்திற்கோ அல்லது சம்பந்தப்பட்ட குழுக்களுக்கோ தெரிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஜனாதிபதிக்கும் இந்த விடயம் தெரியுமா அல்லது மறைக்கப்பட்டதா என்பது தொடர்பிலும் சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார்.
இழந்த பணத்தை மீட்டெடுக்க முடியும் என அரசு கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். உகாண்டாவில் உள்ள பணத்தை மீட்டுவருவோம் என முன்பு கூறியிருந்தாலும் அதில் முன்னேற்றம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
இறுதியில், இந்த இழப்பை ஈடுகட்ட மின்சாரக் கட்டணங்கள் அல்லது எரிபொருள் விலைகளை உயர்த்தி மக்கள்மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.
