போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை வழிநடத்திய பிரதான சந்தேகநபரான அகுணுகொலே அமிதானந்த பிக்குவை தடுத்து வைக்க உத்தரவு!
தாய்லாந்திலிருந்து சுமார் 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை சூட்சுமமான முறையில் கடத்தி வந்த 22 பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள், அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்ட போது சுமார் 112 கிலோகிராம் எடையுடைய “குஷ்” (Kush) மற்றும் “ஹேஷ்” (Hash) வகை போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கடத்தல் நடவடிக்கையை வழிநடத்திய பிரதான சந்தேகநபரான அகுணுகொலே அமிதானந்த பிக்கு, விமான நிலையத்தில் சம்பவம் வெளிப்பட்டதும் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் மிரிஸ்வத்தை பகுதியில் மறைந்து இருந்த அவரை, பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையின்போது நேற்று (26) கைது செய்துள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில், அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இளம் பிக்குகளை தாய்லாந்து சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் பெயரில் ‘WhatsApp’ குழுவை பயன்படுத்தி இந்தக் கடத்தல் நடவடிக்கையை ஒருங்கிணைத்திருந்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபாணி அபேசேகர அனுமதி வழங்கியுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட 22 பிக்குகளும் மேலதிக மருத்துவ பரிசோதனைகளுக்காக கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் பின்னணியில் உள்ள பிற நபர்கள் தொடர்பாக, கொழும்பு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
