மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள்!
நாளை (01) அனுசரிக்கப்படும் சர்வதேச மே தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள நிலையில், கொழும்பு நகரை மையமாகக் கொண்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் முக்கியமான மே தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன், பல அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வுகள் அனைத்தும் அமைதியான சூழலில் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் வீதி பாதுகாப்பு திட்டங்களும் நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்களுக்கு குறைந்தளவு இடையூறு ஏற்படும் வகையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, வெளிமாவட்டங்களிலும் நடைபெறும் மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களுக்கான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு, மாகாணங்களுக்கு பொறுப்பான உயர் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் ஆலோசனைகள் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
