பெண் மருத்துவர்கள் குளிப்பதை வீடியோ பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கைது!


கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த பெண் மருத்துவர்கள் சிலர், குளியலறையில் நீராடிக் கொண்டிருந்த போது, அவர்களைத் தமது கைபேசிகள் மூலம் காணொளி பதிவு செய்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவர்கள் என நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் ஆண்களின் காணொளிகளையும் இவ்வாறு பதிவு செய்துள்ள நிலையில் அந்தக் காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளனவா என்பது குறித்து தற்போது மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.