விசாரணை என்ற பெயரில் திருட்டு : பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சிகரமான திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. வீடு புகுந்து திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்தை, விசாரணை என்ற பெயரில் திருடனிடமிருந்து பெற்றுக் கொண்டு தன்வசம் வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீட்டொன்றில் கடந்த 21 ஆம் திகதி 65 ஆயிரம் ரூபாய் பணமும், சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளும் திருடப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நாவலடி பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், முன்னர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி தற்போது ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், திருடனின் வீட்டிற்கு சென்று, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதாக கூறி நகைகள் மற்றும் பணத்தைப் பெற்றுக் கொண்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பின்னர், அந்தப் பொருட்களை தனது நண்பரிடம் பாதுகாப்பாக வைக்க ஒப்படைத்திருந்ததும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாசிக்குடா சுற்றுலா மையத்தில் விசேட கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை, உதவி பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில் கல்குடா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து வாழைச்சேனை பொலிஸார் கைது செய்தனர்.
மேலும், அவரது நண்பரிடம் இருந்த திருட்டுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை வாழைச்சேனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
