தடம் புரண்ட ‘சாகரிக்கா’ ரயில் இன்று முதல் மீண்டும் சேவையில்..!
தடம் புரண்ட ‘சாகரிக்கா’ ரயில் இன்று (27) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 24ஆம் திகதி பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ‘சாகரிக்கா’ ரயில், வாதுவை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயிலின் 13 பெட்டிகளில் 11 பெட்டிகள் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்துடன் தொடர்புடையதாக, ரயிலில் பணியாற்றிய சாரதி, காப்பாளர், உதவி சாரதி மற்றும் உதவி காப்பாளர் ஆகிய நான்கு ஊழியர்கள் தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, புகையிரத நிர்வாகத்தின் குறைபாடுகளை மறைக்கவே சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் சுயாதீன தொழிற்சங்க கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், தொழில்நுட்ப குறைபாடுகள் உள்ள ரயில்களை இயக்காமல் இருக்கவும், வேகக் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து ரயில்களை இயக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கத்தின் அமைப்பாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.
