மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு எடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையான ஆதரவு!
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு எடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலின் தற்போதைய நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
2017 ஆம் ஆண்டு எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதையடுத்து, பிரதமரின் தலைமையில் நியமிக்கப்பட்ட மீளாய்வு குழு உரிய காலத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்திருந்தால், அன்றே மாகாண சபைத் தேர்தலை நடத்த முடிந்திருக்குமென தெரிவித்தார்.
ஆனால், அந்த குழு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறியதால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டத்தில் தெளிவான ஏற்பாடுகள் இல்லை. இதுவே தற்போதைய தாமதத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சட்டச் சிக்கல்கள் குறித்து நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் ஆராயப்பட்டுள்ளது. இதற்கான தெளிவான அறிக்கையை சமர்ப்பிக்க சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கை விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எல்லை நிர்ணய பிரச்சினைக்கு முரண்பாடற்ற மற்றும் நடைமுறைசார்ந்த தீர்வு கிடைத்தால் மட்டுமே தேர்தலை சிறப்பாக நடத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தேர்தலை நடத்துவதற்கான தேவையான சூழலை உருவாக்க தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
