நாளை முதல் விசேட தாழ்தளப் பேருந்து சேவைகளை ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்க தீர்மானம்!
மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்திலிருந்து நாளை (21) முதல் விசேட தாழ்தளப் பேருந்து சேவையை முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படும் இந்த திட்டம் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ முயற்சியின் கீழ் சுமார் 430.7 மில்லியன் ரூபா செலவில் செயல்படுத்தப்படுகிறது.
அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் மனித கண்ணியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக 10 புதிய குளிரூட்டப்பட்ட தாழ்தளப் பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளன.
இந்த பேருந்துகள் சக்கர நாற்காலி பயனாளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதில் ஏறி இறங்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பேருந்திலும் 33 இருக்கைகள் உள்ளதுடன், ஒரே நேரத்தில் சுமார் 80 பயணிகள் வரை பயணிக்க முடியும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் கூடுதல் வசதிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த சேவை மாகும்புர – கோட்டை மற்றும் மாகும்புர – கடவத்தை ஆகிய பாதைகளில் இயக்கப்படவுள்ளது. அதிக நெரிசல் காணப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் 40 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், இந்த சேவை மகரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை பகுதிகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ளதால், சிகிச்சைக்காக பயணம் செய்யும் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் இது பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
