அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் தொடர்பில் முறையிடுமாறு அறிவிப்பு!


அதிக கட்டணம் வசூலிப்பதுடன், பயணச்சீட்டுகள் வழங்காமல் இயங்கும் பேருந்துகள் குறித்து பயணிகள் புகார் அளிக்க வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இத்தகைய முறைகேடுகள் தொடர்பாக அருகிலுள்ள எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யலாம் என அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார். மேலும், மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் தகவல் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

புகார்களை பதிவு செய்ய 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கம் நாள்தோறும் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக கண்டறியப்பட்ட 80 பேருந்துகளுக்கு எதிராக அபராத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நடமாடும் பரிசோதனை பிரிவின் தகவலின்படி, ஏப்ரல் 8 முதல் 18 வரை 680 பேருந்துகள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

அந்த சோதனைகளில் அதிக கட்டணம் பெற்றிருந்த பேருந்துகள் அடையாளம் காணப்பட்டதுடன், பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகை மீண்டும் அவர்களுக்கே திருப்பி வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பேருந்து சேவைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று மட்டும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் சுமார் 150 பேருந்துகளில் 12 பேருந்துகள் விதிமீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் ஏப்ரல் 21 வரை முழுநேர அடிப்படையில் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.