திறைசேரி மோசடி 'ஹேக்கிங்' அல்ல! -டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன விளக்கம்!
திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி, கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட நேரடி 'ஹேக்கிங்' அல்ல என்றும், மின்னஞ்சல் மூலம் செய்யப்பட்ட ஆள்மாறாட்ட மோசடி என்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது, சர்வதேச நிறுவனம் ஒன்றின் பெயரைப் போல காட்டும் போலியான இணையதளம் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை மோசடியாளர்கள் உருவாக்கியுள்ளனர். உண்மையான அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, திறைசேரி அதிகாரிகளை தவறாக வழிநடத்தி, பணப்பரிமாற்ற அனுமதியைப் பெற்றுள்ளனர்.
இதன் மூலம் அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் பல திசைகளில் நடைபெற்று வருகின்றன. இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு, இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அரச நிறுவனங்கள் இணைந்து, பணம் எங்கு மாற்றப்பட்டது மற்றும் இதற்கு பின்னால் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறிய முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
மேலும், பணப்பரிமாற்றம் வங்கிக் கணக்குகள் மூலம் நடைபெற்றுள்ளதால், அதன் தடயங்களை அடிப்படையாகக் கொண்டு இழந்த நிதியை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையையும் பிரதி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
