மயோனைஸ் பயன்பாட்டின் மீதான தடை மேலும் நீடிப்பு!
மயோனைஸ் மீது தமிழ்நாட்டில் விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பதான மயோனைஸ், முட்டையின் வெள்ளைக் கரு, தாவர எண்ணெய் மற்றும் வினிகர் போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சாண்ட்விச், ஷவர்மா மற்றும் பர்கர் போன்ற உணவுகளில் இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
உணவுகளின் சுவையை அதிகரிக்கும் இந்த மயோனைஸ், குறிப்பாக ஷவர்மா போன்ற உணவுகளுடன் சேர்த்து வழங்கப்படும் போது உணவு நச்சுத்தன்மை ஏற்படுகிறது என்ற புகார்கள் எழுந்ததையடுத்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டது.
அந்த தடை ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், தற்போது அதை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் மீதான இந்தத் தடை நீட்டிப்பு, அதை விரும்பி உண்ணும் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
