திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் - கடுமையாக சாடிய ஹர்ஷ டி சில்வா!


திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி, நுணுக்கமான இணையத் தாக்குதல் அல்ல என்றும், அது அதிகாரிகளின் அடிப்படை அலட்சியத்தினால் ஏற்பட்டது என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாரியளவிலான பணப்பரிமாற்றங்களின் போது பின்பற்றப்பட வேண்டிய நிதித் தணிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இந்தச் சம்பவத்தில் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில், மில்லியன் கணக்கான ரூபாய் பரிமாற்றத்திற்கு முன், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கை உறுதிப்படுத்த சிறிய தொகையை அனுப்பி சரிபார்ப்பது போன்ற வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும், பணப்பரிமாற்ற அறிவுறுத்தல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள், மூல ஒப்பந்தங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வேண்டியிருந்தும், அவை செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களின் பணம் இவ்வாறு இழக்கப்பட்டுள்ள நிலையில், இதனை சாதாரண சம்பவமாகக் கருத முடியாது என்றும், இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் உரிய பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரச நிதியைக் கண்காணிப்பது நாடாளுமன்றத்தின் அரசமைப்பு ரீதியான பொறுப்பாக இருப்பதால், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், அரச நிதி தொடர்பான குழு விரிவான விசாரணைகளை முன்னெடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.