தன்னை இயேசு போல் சித்தரித்த ட்ரம்ப் – சர்ச்சையை கிளப்பிய சமூக வலைதள பதிவு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை கிறிஸ்தவ மதக்கடவுள் இயேசு போல் சித்தரித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தாக்குதல் நடத்தியிருந்தன. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் சில அரபு நாடுகள் மீது தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்த பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனிடையே, கிறிஸ்தவ கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவரான 14ஆம் பாப்பரசர் லியோ, வத்திக்கானில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன் உரையாற்றினார். அப்போது, அவர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை விமர்சித்தார்.
போர்கள் பிரிவினையை ஏற்படுத்தும். நம்பிக்கை அனைவரையும் இணைக்கும். தற்பெருமை, பணம் போதும். வலிமையை வெளிக்காட்டியதும் போதும். போர்களும் போதும். உண்மையான வலிமை வாழ்க்கையில் சேவை செய்வதில் கிடைக்கும். முட்டாள் தனமான போர்களில் இருந்து ஆட்சியாளர்கள் வெளியே வரவேண்டும்.
போர்களை நிறுத்துங்கள். இது அமைதிக்கான நேரம். மேசைகளில் அமர்ந்து ஆயுதம், மரணங்களுக்கு திட்டமிடாமல் பேச்சுவார்த்தை மற்றும் மத்தியஸ்தத்தில் ஈடுபடுங்கள் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், 14ஆம் பாப்பரசர் லியோவின் இந்த கருத்துகளுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை இயேசு போல் சித்தரித்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட கருத்தில், “நான் பாப்பரசர் லியோவின் ரசிகன் அல்ல. பாப்பரசர் லியோ தனது பணியை சரிவர செய்வதாக நான் நினைக்கவில்லை. அவர் மிகவும் இடதுசாரி சிந்தனையாளராக உள்ளார். குற்றங்களில் பாப்பரசர் லியோ மிகவும் வலிமையற்றவர். வெளியுறவுக்கொள்கைகளிலும் அவர் மோசமானவர். ஈரான் அணு ஆயுதத்தை வைத்துக்கொள்ளட்டும் என நினைக்கும் போப் லியோ நமக்கு தேவையில்லை” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், “நான் வெள்ளை மாளிகையில் இல்லாவிட்டால் பாப்பரசர் லியோ வத்திக்கானில் இருக்கமாட்டார். போப் லியோ போப்புக்கான வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
அதோடு, இடதுசாரி சிந்தனைகளை கைவிட்டு பொதுஅறிவுடன் சிந்தித்து போப்பாக செயல்பட வேண்டும் என்றும், அரசியல்வாதியாக மாற முயற்சிக்கக்கூடாது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய செயல்கள் பாப்பரசர் லியோவுக்கு மட்டுமல்லாமல், உலகளாவிய கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
