தொலைபேசி ஊடாக பொதுமக்களுக்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!
தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பொதுமக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக, திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
2024ஆம் ஆண்டின் 39ஆம் இலக்க இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தம்) சட்டத்தின் 32ஆம் பிரிவின் கீழ், காரணமின்றி ஒருவரைத் தொந்தரவு செய்யும் நோக்கில் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்வதும், குறுஞ்செய்திகள் அனுப்புவதும் குற்றமாகக் கருதப்படுகிறது.
மேலும், ஒருவரின் தொலைபேசி இலக்கத்தை அவர்களின் அனுமதியின்றி சமூக ஊடகங்களில் பகிர்வதும் அல்லது தவறான தகவல்களுடன் பரப்புவதும் இதே சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்த குற்றத்திற்கு குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ரூ.100,000 அபராதம் விதிக்கப்படலாம். அபராதத்தை செலுத்தத் தவறினால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இணைப்பை துண்டிக்கும் அதிகாரமும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய தொல்லைகளுக்கு உள்ளாகும் பொதுமக்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
.webp)