50,000 ரூபாவிற்கு விற்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை!
கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னை நீராவி பகுதியில், ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை 50,000 ரூபாவிற்கு விற்கப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தில், குழந்தையை விற்றதாக கூறப்படும் தாய், அவருடன் இருந்த ஆண், மற்றும் குழந்தையை பணம் கொடுத்து பெற்ற பெண் ஆகிய மூவர், அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு தர்மபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விசாரணைகளில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடன் வந்த ஆண் ஒருவர், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்து, தமக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும், அதில் ஒருவரை வளர்க்க முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்து, குழந்தையை விற்பனை செய்ய முனைந்துள்ளனர்.
இரு தரப்பினரும் போலியான ஆவணங்களை தயாரித்து, குழந்தை விற்பனை செய்யப்பட்டதாகவும், அதற்கான சாட்சியாக புகைப்படங்களும் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயத்தை அறிந்த கிராம மக்கள் உடனடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்டவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், விற்பனை செய்யப்பட்ட குழந்தை உண்மையில் அந்தப் பெண்ணின் குழந்தையா அல்லது வேறு யாருடைய குழந்தையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தையை வாங்கிய பெண், குழந்தையுடன் கொழும்பு நோக்கி புறப்படத் தயாராக இருந்ததாகவும், இது குழந்தைகள் கடத்தல் சம்பவமா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தற்போது பாதிக்கப்பட்ட குழந்தை பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
