பிக்குகளின் போதைப்பொருள் கடத்தல் - பிரதான சூத்திரதாரிகளான 2 தேரர்களை கைது செய்ய இன்டர்போல் உதவி கோரிக்கை!
தாய்லாந்திலிருந்து சுமார் 110 கிலோ எடையுடைய குஷ் மற்றும் ஹேஷ் வகை போதைப்பொருட்களை கடத்தி வந்ததாகக் கூறப்படும் 22 இளம் பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தக் கடத்தல் வலையமைப்பின் பின்னணியில் இரண்டு பிரதான தேரர்கள் இருப்பது விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.
தம்மரத்ன மற்றும் புண்ணியரத்ன என அறியப்படும் இந்த இரு தேரர்களும் தாய்லாந்தில் தங்கி இருந்து இந்த சட்டவிரோத வலையமைப்பை ஒருங்கிணைத்ததாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் உதவியுடன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கைது செய்யப்பட்ட 22 பிக்குகளிடமிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் இடம்பெற்ற மற்றொரு கடத்தல் சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் மேலும் 12 பிக்குகளை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த வலையமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் அங்குணகொலபெலஸ்ஸ அமிதானந்த தேரர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். மேலும் சந்திரகுமார் எனும் மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் படி, தாய்லாந்தில் உள்ள இரு தேரர்கள் அமிதானந்த தேரருடன் இணைந்து இந்த வலையமைப்பை இயக்கியதும், கடத்தப்படும் போதைப்பொருட்கள் சந்திரகுமார் மூலம் உள்ளூர் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. பின்னர் அவை சில பிரபல வர்த்தகர்களிடம் கைமாறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இந்த பயணங்களுக்கு தேவையான விமானச்சீட்டுகள் மற்றும் செலவுகளை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் காலி பகுதியைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் கொழும்பில் மறைந்திருக்கலாம் என தகவல் கிடைத்துள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
