அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!


விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு இன்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கைது, கடந்த 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் ஏற்பட்ட காணித் தகராறு சம்பவத்தைத் தொடர்ந்து இடம்பெற்றது. அப்போது பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த காணியின் உரிமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அந்த நிலம் தமக்குச் சொந்தமானது என அர்ச்சுனா தரப்பும், அதேபோல் மற்றொரு பெண்ணும் உரிமை கோரி வந்துள்ளனர்.

சம்பவத்தன்று, காணியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட வாய்த்தகராறு தீவிரமடைந்ததன் பின்னர், துப்பாக்கி காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.