அமெரிக்கா – ஈரான் போர் முடியும் தறுவாயில்: டொனால்ட் டிரம்ப்
அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் நிலை முடிவுக்கு வரும் தருவாயில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், “அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் முடியும் நிலைக்கு வந்துள்ளது. இருப்பினும், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என நான் நினைக்கிறேன்.
நான் இப்போது ஈரான் மீது தாக்குதலை நிறுத்தினால்கூட, அவர்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு குறைந்தது 20 ஆண்டுகள் ஆகும். நாங்கள் இன்னும் முடிக்கவில்லை; என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.
ஈரானியர்கள் ஒரு ஒப்பந்தத்துக்காக மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஈரானின் அணுசக்தித் திட்டங்களை தடுக்கும் நிலை அவசியமானதாக இருந்தது.
அவர்களிடம் அணுசக்தித் திறன் இருந்திருந்தால், நாம் அனைவரும் அவர்களை ‘சார்’ என அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்; அது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அடுத்த இரண்டு நாட்களில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இஸ்லாமாபாதில் சந்திப்பு நடைபெற வாய்ப்பு உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா – ஈரான் இடையிலான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை அடுத்த சில நாட்களில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடைபெற வாய்ப்புள்ளதாக டிரம்ப் கூறியிருந்தார்.
அண்மையில் இரு தரப்பும் 2 வார கால போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்ட பின்னர், பாகிஸ்தானில் 21 மணி நேர பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஈரான் அணு ஆயுதத் திட்டங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கிய நிபந்தனையாக உள்ள நிலையில், அமெரிக்க தாக்குதலுக்கு இழப்பீடாக ஈரான் கோடிக்கணக்கான தொகையை கோருவதாகவும், இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
