கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் 2 கோடி ரூபா வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்!
கொழும்புப் பகுதியில் உள்ள பல விற்பனை நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு மதுபானத் தொகுதியை மதுவரித் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.
கொழும்பு பிரதேசத்திலுள்ள பல விற்பனை நிலையங்களை இலக்காகக் கொண்டு, மதுவரி விசேட சோதனை பிரிவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம். பி. பிரேமரத்ன தெரிவித்தார். இந்த சோதனையில் நான்கு குழுக்களின் கீழ் சுமார் 30 அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்கு உரிய வரி செலுத்தாமல், பண்டிகைக் கால விற்பனையை நோக்கமாகக் கொண்டு தயார் செய்யப்பட்டிருந்த இந்த மதுபானப் பொருட்களில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்கள் அனைத்தும் போலியானவை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மதுபானத் தொகுதி இலங்கைக்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் விரிவான விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மதுவரி ஆணையாளர் நாயகம் எம். பி. பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
