QR குறியீட்டு முறை : தவறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!
நாடு முழுவதும் கியூ.ஆர் குறியீடு (QR Code) முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் நிலையில், பொதுமக்கள் அந்த முறையைப் பயன்படுத்தும் போது சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எவ். யூ. வூட்லர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கியூ.ஆர் குறியீடு முறையை தவறாக பயன்படுத்துபவர்கள், அதில் மோசடி செய்பவர்கள் அல்லது அதன் நடைமுறைப்படுத்தலுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது பொலிஸார் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என எச்சரித்தார்.
அத்துடன், எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் போது பொதுமக்கள் பொறுமையுடனும் ஒழுங்குடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், பொலிஸாருடன் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் நடமாடும் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சட்ட ஒழுங்கை பேணுவதற்காக மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
