பெற்றோரிடம் பணம் வசூலிப்பதைத் தவிர்க்குமாறு அதிபர்களுக்குப் பிரதமர் உத்தரவு!
பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோர்களுக்கு எவ்வித பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும் என்றும், இதற்காக பெற்றோரிடம் நிதி வசூலிப்பதைத் தவிர்க்குமாறும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதிபர்களுக்கு கடும் பணிப்புரை விடுத்துள்ளார்.
தங்காலை மற்றும் வலஸ்முல்ல கல்வி வலயங்களைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நடைபெற்ற விழிப்புணர்வு சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். அதனுடன், வகுப்பறைகளில் மாணவர் எண்ணிக்கையை ஆரம்பப் பிரிவுகளில் 25 முதல் 30 வரையிலும், இரண்டாம் நிலைப் பிரிவுகளில் அதிகபட்சம் 35 மாணவர்களாக மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், எந்தவிதத்திலும் சுற்றறிக்கைகளுக்கு புறம்பாக மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
2026ஆம் ஆண்டிற்குள் அனைத்து பாடசாலைகளுக்கும் ‘ஸ்மார்ட் போர்டு’ மற்றும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்றும், இதற்காக பெற்றோரிடம் பணம் கோரப்படக் கூடாது என்றும் பிரதமர் வலியுறுத்தினார். 2025 மற்றும் 2026 ஆண்டுகளுக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள அரசாங்க நிதி பாடசாலை அபிவிருத்தி பணிகளுக்காக முறையாக பயன்படுத்தப்படுவதை அதிபர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்வித்துறையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க 23,000 ஆசிரியர்களை சேவையில் இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான போட்டித் தேர்வுகள் ஏப்ரல் இறுதி அல்லது மே மாத ஆரம்பத்தில் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, அதிபர் மற்றும் ஆசிரியர் நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும் போது அரசியல் செல்வாக்குகளை பயன்படுத்தி விருப்பமான இடங்களைப் பெற முயற்சிக்காமல், வழங்கப்படும் பொறுப்புகளை தயக்கமின்றி ஏற்றுக்கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராய சம்பளக் குழுவிற்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதிபர் சேவையின் கௌரவத்தை உறுதிப்படுத்துவதற்கான விசேட அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தகுதியுள்ளவர்கள் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்காமல் ஒரே பாடசாலையில் பிரதி அதிபர்களாக தொடர்ந்து பணியாற்றுவதை அனுமதிக்க முடியாது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் பிரச்சினைகள் குறித்து தேசிய மட்டத் தீர்மானங்கள் வரும்வரை காத்திருக்காமல், கோட்ட மற்றும் மாகாண மட்டங்களில் உடனடி தீர்வுகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
