பிரத்தியேக விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஈரானிய கடற்படையினரின் சடலங்கள்!


இலங்கைக்கு அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலுக்குள்ளான கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் வெள்ளிக்கிழமை (13) ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசேட விமானம் மூலம் குறித்த சடலங்கள் ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.

ஈரான் கடற்படைக்கு சொந்தமான “ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா” (IRIS Dena) என்ற கப்பல் கடந்த 4ஆம் திகதி இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.

குறித்த கப்பலிலிருந்து கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு கிடைத்த உதவி கோரிக்கையைத் தொடர்ந்து இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தன.

இதன்போது காயமடைந்த நிலையில் 32 ஈரான் கடற்படை வீரர்கள் மீட்கப்பட்டு காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் சம்பவத்தில் உயிரிழந்த 84 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

இச்சடலங்களை ஈரான் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு கடந்த வாரம் காலி பிரதான நீதவான் கராப்பிட்டிய வைத்தியசாலை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய சடலங்கள் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் அவற்றை ஈரானுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் படி நேற்று அதிகாலை 45 உடல்களும், பிற்பகல் மீதமுள்ள 39 உடல்களும் பிரத்தியேக விமானம் மூலம் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.