மத்திய கிழக்கு போர்ச் சூழல் - ரஷ்ய எரிபொருளை நாடும் அரசாங்கம்!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்களால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சீர்குலைவைக் கருத்தில் கொண்டு, அவசர எரிபொருள் கொள்வனவு தொடர்பாக இலங்கை அரசாங்கம் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் நேற்று (13) வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ரஷ்ய எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் தடையின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக ரஷ்ய எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையை ரஷ்ய அரசாங்கத்திடம் உடனடியாக தெரிவிப்பதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் ரஷ்யத் தூதுவர் உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கைக்கு தேவையான எந்த நேரத்திலும் ரஷ்யாவின் ஆதரவு இருக்கும் என்றும் தூதுவர் தெரிவித்ததாக அமைச்சர் கூறினார்.
இந்த கலந்துரையாடலில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
