பல்கலைக்கழக விரிவுரைகளை இணையவழியில் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்!
இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு, பல்கலைக்கழக விரிவுரைகளை இணையவழியில் (Online) நடத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அனைத்து துணைவேந்தர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
கல்வி நடவடிக்கைகள் இடையூறு இல்லாமல் தொடர வேண்டும் என்பதையும், எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பல்கலைக்கழக கல்விசார் பணியாளர்கள் முடிந்தவரை புதன்கிழமைகளில் “வீட்டிலிருந்து பணிபுரிதல்” (Work from Home) முறையை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் முழுமையாக இணையவழியில் நடத்துவது சாத்தியமில்லாத காரணத்தால், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் குறிப்பிட்ட நேரடி (Physical) அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
மேலும், பல்கலைக்கழக ஊழியர்கள் ஒன்றிணைந்து வாகனங்களை பகிர்ந்து (Vehicle Pooling) பயணம் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவப் பீடங்களுக்கான செய்முறைப் பயிற்சிகள் (Practical Sessions) சிறிய குழுக்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும். கோட்பாட்டு (Theoretical) பாடங்கள் இணையவழியில் நடைபெறும்.
ஒரு குழு மாணவர்கள் ஒரு வாரம் பல்கலைக்கழகத்திற்கு வந்து தங்களின் செய்முறைப் பயிற்சிகளை முடித்து மீண்டும் திரும்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
