சுரேஷ் சலேவை சிறைக்குள் வைத்து கொலைச் செய்ய சதி! – விமல் வீரவன்ச கடும் எச்சரிக்கை!


பயங்கரவாத தடையச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை சிறைக்கூண்டுக்குள் வைத்து கொலை செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சுரேஷ் சலேவின் கைது முழுமையாக அரசியல் பழிவாங்கலாகும் எனக் கூறிய அவர், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டு மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

எலிகள் ஓடித் திரியும், துப்பரவற்ற சிறைக்கூண்டில் மலசலக்கூடத்திற்கு அருகில் அவர் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அவரை நோயாளியாக்கி மெல்ல மெல்லக் கொல்ல அரசாங்கம் திட்டமிடுகிறது எனவும் விமல் வீரவன்ச சாடினார்.

பயங்கரவாத தடையச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை நீதிமன்றத்தில் அவரை தொடர்பான முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கெதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனக் கோரிய விமல் வீரவன்ச, சுரேஷ் சலேவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்பு சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.