அநுரவும் ஹரிணியும் நீண்ட காலம் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்! உதய கம்மன்பில எச்சரிக்கை!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்காலத்தில் நீண்ட காலம் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பழிவாங்கும் நோக்கில் தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள், இறுதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கே பாதகமாக மாறக்கூடும் என அவர் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்ட நாட்களை விட பல மடங்கு காலம் அநுர சிறையில் இருக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டது உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே நடைபெற்றது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கம்மன்பில குறிப்பிட்டார்.
ஒரு ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களை “உத்தியோகபூர்வம்” மற்றும் “தனிப்பட்டது” எனப் பிரித்துப் பார்க்க முடியாது என்றும் அவர் வாதிட்டார்.
