ஆகஸ்ட் மாதத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்? – சம்பிக்க ரணவக்கவின் எச்சரிக்கை!


இலங்கையின் மின்சக்தி பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் முழுமையாக செயலிழக்கும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்ட அவர், மின் உற்பத்தி நிலையங்களின் பராமரிப்பு பணிகள் மற்றும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக எதிர்காலத்தில் பாரிய மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

நுரைச்சோலை மின் நிலையத்தின் முதலாவது அலகு ஜூன் மாதத்திலும், இரண்டாவது அலகு ஜூலை மாதத்திலும் பராமரிப்பிற்காக மூடப்படவுள்ளதாகவும் கூறினார். மேலும், களனிதிஸ்ஸ மற்றும் வெஸ்ட் கோஸ்ட் மின் நிலையங்களும் குறிப்பிட்ட காலத்திற்கு முடக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிலக்கரி கொண்டுவர திட்டமிடப்பட்ட 25 கப்பல்களில் இதுவரை 11 கப்பல்கள் மட்டுமே வந்துள்ளதாகவும், ஏப்ரல் 20-ஆம் திகதிக்குள் 20 கப்பல்களைக் கொண்டுவரத் தவறினால், ஆகஸ்ட் 27 ஆம் திகதியளவில் நுரைச்சோலை மின் நிலையம் முற்றாக முடங்கும் அபாயம் இருப்பதாகவும் சம்பிக்க ரணவக்க எச்சரித்தார்.