மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்த கும்பல் - கைதான பிரதான சூத்திரதாரி!


மட்டக்களப்பு நெல்லிக்காடு பகுதியில் இடம்பெற்ற பெண்கள் கடத்தல் மற்றும் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் 20ஆம் திகதி, கொக்கட்டிச்சோலை – நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன், ஏற்கனவே காணாமல் போன 40 வயதுடைய பெண் ஒருவர் சடலமாகவும் கண்டுபிடிக்கப்பட்டார். மேலும், அந்த இளம் தாயின் 3 வயது சிறுமியும் வயல் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக, வவுணதீவு பொலிஸ் பிரிவின் காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயது கணவர், 22 வயது தம்பி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும், கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளை வாங்கியதாக சந்தேகிக்கப்படும் திருகோணமலை மற்றும் ஊறணி பகுதிகளைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதன் போது, இரண்டு முச்சக்கரவண்டிகள், ஒரு கார் மற்றும் கோடரி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மயக்கமருந்துகளும் கைப்பற்றப்பட்டதுடன், ஒரு முச்சக்கரவண்டி சாரதியும் கைது செய்யப்பட்டார்.

மேலும் விசாரணைகளின் அடிப்படையில், இந்த குற்றச்செயலை திட்டமிட்டு நடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் பிரதான சூத்திரதாரி — வத்தளையைச் சேர்ந்த 49 வயதுடைய மருந்து முகவர் திவாகரன் (சிவா என அழைக்கப்படுபவர்) — நேற்று இரவு கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தற்போது மட்டக்களப்புக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள், கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலிலும், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பிலும், கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தலைமையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.