மத்திய கிழக்கு போர் நெருக்கடி; எகிறும் விமான Ticket விலைகள்!
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் நெருக்கடி காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, வானூர்தி எரிபொருள் விலையும் பாரியளவில் உயர்ந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒரு கலன் வானூர்தி எரிபொருளின் விலை 2.25 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், தற்போது அது 4 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விலையேற்றம் வானூர்தி பயணச்சீட்டு விலைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகளின் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படமாட்டாது என்றும் அவர் உறுதியளித்தார்.
ஆனால் புதிதாக பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கான கட்டணம் அன்றைய சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மத்திய கிழக்கின் சில வான்பரப்புகள் இன்னும் மூடப்பட்டிருப்பதால் வானூர்திகள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உருவாகி, இதனால் கூடுதல் எரிபொருள் செலவை வானூர்தி நிறுவனங்கள் சுமக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் குறுகிய காலத்திற்கு ஸ்ரீலங்கன் வானூர்தி சேவைக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில வானூர்தி பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பயணங்களுக்கான கோரிக்கைகளும் அதிகரித்துள்ளதுடன், சில பயணங்களில் செல்லும் போது பயணிகள் அதிகமாக இருந்தாலும் திரும்பும் போது குறைவாக இருப்பது போன்ற சவால்களையும் வானூர்தி நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய உலகளாவிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வானூர்தி நிறுவனங்கள் தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு மேலும் தெரிவித்தார்.
